Autograph
Saturday, December 19, 2009
தனது திருமணத்திற்கு, தன் வாழ்வில் பழகிய அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்து அழைக்கப் புறப்படும் சேரனோடு நமது பயணமும் தொடங்குகிறது. என்றாலும் அவரது வாழ்வில் முக்கிய நிகழ்வுகளான ஒரு ஈர்ப்பு, ஒரு காதல் (தொடர்ந்த தோல்வி), ஒரு தோழமை - இவற்றோடு இணைந்த பெண்களும் கவனம் பெறுகிறார்கள்.
நெய்க்காரன்பட்டியின் செம்மண் சாலைகளில் ஆரம்பமாகிறது முதல் கிளைக்கதை. மனதைக் கவர்ந்த பக்கத்து ஊர்ப் பெண் கடந்து செல்லும் வரை ஓடைப் பாலத்தில் காத்திருப்பதும், அவள் சைக்கிள் வாங்கியதும் இவனும் சைக்கிள் வாங்கி உற்சாகமாய் மிதித்து வருவதும், அவள் மூன்று பாடங்களில் பெயிலாகி விட கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல் அவள் தந்தை கையெழுத்தைப் போட்டுப் பிறகு அதற்காக அடி வாங்குவதும், அவளது தாவணியை வாங்குவதற்காகவே பள்ளி நாடகத்தில் பெண் வேடம் போடுவதும், இப்படிக் காட்சிகள் கண் முன் விரிய விரிய மனசில் பல பழைய பள்ளி நினைவுகள் யார் மனசிலும் நிழலாடாமல் போகாது.
"எங்க அப்பாரு என்னைப் பத்தாம்ப்பு படிக்க வச்சதே பெரிய விஷயம்.. அடுத்த வருஷம் யாருக்காச்சும் கல்யாணம் கட்டிக் குடுத்துடுவாரு.." என்று சொல்லி அவள் அழுகையினூடே சிரிக்க, என்னவென்றே புரியாத ஒரு சோகத்தோடு அவள் போவதைப் பார்த்துக் கொன்டிருப்பது கவிதைத்துவமான காட்சி. அந்தக் காலத்து (இந்தக் காலத்தும்) கிராமத்து நிதர்சனம் கூட.
அதே பெண்ணைத் திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் பார்க்கும் காட்சியில், இருவர் மனதிலும் இனம் புரியாத நெகிழ்ச்சி. வரவேற்று உட்கார வைத்து, தண்ணீர் கொன்டு வர உள்ளே போகிறவள், கண்ணாடி முன்னால் நின்று முகம் துடைத்துப் பொட்டைத் திருத்திப் போவது நல்ல டச். கணவன் மிக வெள்ளந்தியாய், "கழுதை! தூக்குச் சட்டியைக் கொண்டா, காப்பித் தண்ணி வாங்கியாறேன்.." என்று கிளம்புவது கன ஜோர். மகனுக்குத் தன் பெயரை அவள் வைத்திருப்பதை அறிந்து சேரன் மிக செண்ட்டியாக அந்தப் பையனைக் கட்டிக் கொன்டு உணர்ச்சி வசப்படுகையில், கூட வந்த நண்பன், அடுத்த மகனின் பெயரை விசாரித்து, "பார்த்தியா! உன்னை மாதிரியே சுரேஷுன்னு ஒருத்தன் இருந்திருக்கிறான்.." என்று சொல்லிக் கலாய்ப்பது அக்மார்க் கிராமத்துக் குசும்பு. வசனகர்த்தா சேரன் கொடி நாட்டுகிறார்.
சைக்கிள் பயணப் பள்ளிப் பருவம் முடிந்ததும், ஆலப்புழையின் பின்நீர்நிலைகள் (back waters) சூழ்ந்த நிலப்பரப்பின் கல்லூரிக் காலத்து அடுத்த கிளைக்கதைக்கு மாறுகிறது படம். மழையின் பிண்ணனியில் உருவாகும் சுகமான காதலும், அதிர்ச்சிகரமான தோல்வியும் நச்சென்று மனதில் பதிகின்றன. இந்தப் பகுதியில் ஒளிப்பதிவு செய்திருக்கும் விஜய் மில்டன் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். வெல்டன்.
மலையாளம் புரியாததால் கோபிகா என்ன சொல்கிறார் என்று அறிய முடியாமல் சேரன் தவிக்கும் காட்சிகளில் நல்ல நயம். ஒவ்வொரு படகுச் சவாரியும் காதலின் அடுத்தடுத்த பரிணாமத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. அதே படகுச் சவாரியில் காதலின் தோல்வியும் வலிமையாக உணர்த்தப் படுகிறது. "காதலி வீடு, பக்கத்துத் தெருவில இருந்தாலும், பாகிஸ்தானில இருக்கிற மாதிரி இருக்கும்!!" என்பது போன்ற வசனங்கள் காட்சிக்கு அழகு சேர்க்கின்றன. சேரன் கோபிகாவை சரஸ்வதி தேவியாக, மீராவாக, ஏவாளாக நினைத்துப் பார்க்கும் காட்சிகளும் சுவை சேர்க்கின்றன. கோபிகாவின் கூர்மையான பார்வைகளும் husky-யான குரலும் மயக்குகின்றன. நல்ல அழகு, நல்ல நடிப்பு. பாராட்டுக்கள். மொத்தத்தில் இந்தக் கேரள segment, பல விதங்களில் படத்தை உச்சாணிக் கொம்புக்குக் கொன்டு சென்று நிலை நிறுத்துகிறது. (மலையாளிகள் தமிழர்களைத் திட்டுவதும், அதைக் கேட்டு சேரன் சண்டையிடுவதும் தவிர்த்திருக்கலாம். வலியத் திணிக்கப்பட்டது போல் உணர்வு. அது மட்டுமே ஒரு குறை. சிறிய குறை.)
ஆலப்புழை படகுச் சவாரியிலிருந்து கொஞ்ச நேரம் கோயம்புத்தூரில் காதல் தோல்வியின் துயரத்தில் மூழ்குகிறது படம். கிராமத்தில் தன் மகன் பள்ளிப் பருவத்தில் மீசை ஒதுக்குவதைக் கன்டுபிடித்து, விரட்டிப் பிடித்து அந்த இளம் மீசையை மழித்து, "பொண்ணு வயசுக்கு வந்துட்டா ஆத்தா கிழவி, பையனுக்கு மீசை முளைச்சுட்டா அப்பன் கிழவன்.. உன் அப்பன் இன்னும் குமரன்டா" என்று அதிரடி செய்யும் அப்பா ராஜேஷ், காதல் தோல்வியில் சேரன் தன் நெஞ்சில் சிகரெட்டால் காயம் செய்து கொண்டதைக் கண்டு இயலாமையும் பதைப்புமாய் முகத்தில் காட்டும் ரியாக்ஷன் அட்டகாசம். சேரன் குடித்து விட்டு வாழக்கையைக் குட்டிச் சுவராக்கிக் கொள்ளும்போது குடிப்பதற்கு எதிராக அவர் பேசும் டயலாக் மிக அழுத்தம். பல பேர் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். வெரிகுட் ராஜேஷ்.
கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு மாறும்போது படம், மாநகரப் பேருந்துப் பயணம் போல டாப் கியரில் வேகம் பிடிக்கிறது. விளம்பரக் கம்பெனியில் வேலை பெற்று சிநேகாவின் தோழமையில் கனிந்து போகிறார் சேரன். ஆனால், சிநேகா அவ்வளவு தூரம் சேரனுக்காக செய்வதெல்லாம் கொஞ்சம் டூ மச் என்ற உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம் என்ற உணர்வைப் படத்தில் ஏற்படுத்துவது இந்த நட்புக் காட்சிகள் தாம்.
கேரளாவின் முன்னாள் காதலியை விதவையாகப் பார்த்து உச்சகட்ட அதிர்ச்சிக்கு ஆளாகிறார் சேரன். தன் திருமணத்தை நிறுத்திவிடலாமாவென்ற தள்ளாட்டமான மனநிலைக்குத் தள்ளப்பட்டு மீள்கின்றார். இந்தக் காட்சிகளில் லெக்சரைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். குறித்தபடி திருமணம் நடப்பது யதார்த்தமான, துணிச்சலான முடிவு. திருமணப் பெண் கனிகா ரொம்ப ஓவராக வெட்கப்படுகிறார். ஆனால் குழந்தைத்தனமான ஒரு மகிழ்ச்சி தெரிகிறது அவரது கண்களில், ரசிக்கும்படியாக.
இயக்குனராகத் தனி முத்திரை பதித்திருக்கும் சேரன் நடிப்பில் அவ்வளவு ஜொலிக்கவில்லை என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும். (ஒரு இயக்குனராக, நடிகருக்குச் சொல்லித் தருவதைப் போலவே நடித்திருக்கிறார், குறிப்பாக அழும் காட்சிகளில்.) இருந்தாலும் இந்தக் கதையில் எவரும் நடிக்கலாம் என்பது தான் உண்மை என்பதால் அது அவ்வளவாகப் படத்தை பாதிக்கவில்லை.
பரத்வாஜின் இசை "பரவாயில்லை, போதும்" என்னும் அளவுக்கு இருக்கிறது. ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே பாடலும், ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடலும் அருமையாக இருக்கின்றன. ரெண்டாவது பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதமும், பொருத்தமாகப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதும் சிறப்பு.
தேடிப் பார்க்க வேண்டிய, பார்த்து ரசிக்க வேண்டிய, ரசித்து மகிழ வேண்டிய படம் என்பதில் சந்தேகம் இல்லை.
0 comments:
Post a Comment