[HOME.gif][TAMIL+KARAOKE.gif][KARAOKE+VIDEO.gif][TAMIL+REMIX.gif][TAMIL+LYRICS+1.gif][TAMIL+POP.gif][MP3+SONGS.gif]

Naan Avan Illai 2

Friday, January 1, 2010



நான் அவன் இல்லை 2

“பிரிக்கப்பட்ட தாயையும், மகளையும் ஒன்றிணைப்பதற்காக வெளிநாட்டில் அதீத ஆசை மற்றும் ஆடம்பரங்களுடன் வாழும் நான்கு பெண்களை ஏமாற்றுகிறான், அண்ணாமலை” இதுவே ‘நான் அவன் இல்லை 2’ கதைச் சுருக்கம். கே.பாலசந்தரின் ‘நான் அவன் இல்லை’யை நடிகர் ஜீவனை வைத்து மீள்தயாரிப்பு செய்திருந்த, இயக்குனர் செல்வா அதன் நீட்சியாக கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் இது.

இந்தியாவின் 5 பெண்களை ஏமாற்றிவிட்டு ‘நான் அவன் இல்லை’ என்று கூறி தமிழ்நாட்டு காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் அலைச்சல் காட்டிவிட்டு தப்பிக்கும் அண்ணாமலை (ஜீவன்) ஐரோப்பிய நாடொண்றில் தஞ்சமடைகிறார். அவருடன் நண்பர் நெப்போலியனும் (மயில்சாமி). பணத்தாசை பிடித்த நடிகை தீபா (லட்சுமிராய்), ஆண்களின் சபலத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் ஷகி (ஷ்ருதி பிரகாஸ்), அடிமைபோல கணவனை தேடும் நிஷா (ஸ்வேதா மேனன்) மற்றும் திருட்டுத்தனம் புரியும் மரியா (ரஷானா மயூரா) ஆகியோரை விதம் விதமாக ஏமாற்றி பணம் சேர்க்கிறார்.

ஏமாற்றி சேர்க்கும் பணத்தை இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மஹாலக்மியின் (சங்கீதா) வைத்திய செலவுக்கும், அவரது மகளை பிரித்து பணம் கேட்பவர்களுக்கும் கொடுத்து தாயையும், மகளையும் ஒன்றுசேர்த்து விட்டு மீண்டும் ‘நான் அவன் இல்லை’ என்று கூறி பாதிரியார் வேடத்தில் தப்பித்து செல்கிறான் அண்ணாமலை. மீண்டும் இந்தியாவில் முருகன் என்கிற பெயரில் அண்ணாமலை தன்னுடைய ஏமாற்று படலத்தை ஆரம்பிப்பதுடன், ‘நான் அவன் இல்லை 2’ முடிகிறது. இதன் தொடர்ச்சிகள் எதிர்காலத்திலும் சாத்தியமே.

‘நான் அவன் இல்லை’ முதல் பாகத்தில் திரைக்கதையின் ஓட்டத்துக்கு பொருந்தியிருந்த நடிகர் ஜீவன், அதன் தொடர்ச்சியை இந்தப் படத்திலும் காட்டியிருக்கிறார். பெண்களை ஏமாற்றும் வாலிபனான அவரது தோற்றமும், உடல்மொழியும் வெகு இயல்பு. ஆனால், எதிர்காலத்திலும் இவ்வாறான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக்கொண்டால் மக்களுக்கு அலுத்துவிடும். இலங்கை பெண் மஹாலக்மியாக வரும் சங்கீதாவுக்கு பெரிய வேலையில்லை. இலங்கை தமிழை (அப்படித்தானே சொல்கிறார்கள் படத்தில்) கொச்சையாக பேசுகிறார். கிடைத்த சந்தப்பங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

லட்சுமிராய், ஷ்ருதி பிரகாஸ், ஸ்வேதா மேனன், மற்றும் ரஷானா மயூரா ஏமாற்றப்படும் பெண்களாக அதிக கவர்ச்சியை காட்டிச் சென்றிருக்கிறார்கள் படம் முழுவதிலும். இவர்களுக்கு நடிக்க சந்தர்ப்பங்கள் பெரிதாக இல்லை. அரைகுறை ஆடைகளுடன் இயக்குனர் கேட்டதை படத்தில் கொடுத்திருக்கிறார்கள். வேறு ஒன்றும் இவர்களை பற்றி கூறுவதற்கில்லை. அதே நெப்போலியன் பாத்திரத்தில் மயில்சாமி சிரிக்க வைக்கிறார். அண்மைக்காலத்தில் அவரை அனேக படங்களில் காணக்கிடைக்கிறது. இவர்கள் தவிர ராஜ்கபூர், பைவ்ஸ்டார் கிருஷ்னா உள்ளிட்ட சிலரும் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஓரளவு பலம் ஒளிப்பதிவு. வெளிநாடுகளின் (நடிகைகளினதும்) வனப்பு மிக்க பகுதிகளில் அழகாக படம்பிடித்திருக்கிறார். படத்தில் மிகப்பெரிய ஏரிச்சலை ஏற்படுத்துகிறது டி.இமானின் பாடல்களும், பின்னணி இசையும். இவர், எதிர்காலத்திலாவது பாடல்கள் என்ற போர்வையில் இரைச்சல்களை தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். படத்தின் வசனங்களில் பெரிய ஆச்சரியமில்லை. படத்தொகுப்பு இயக்குனரை திருப்திப்படுத்தியிருக்கிறது.

கே.பாலசந்தரின் ‘நான் அவன் இல்லை’யை அடிநாதமான வைத்து கதையையும், திரைக்கதையும் எழுதியிருக்கும் இயக்குனர் செல்வா, சில இடங்களில் சுவாரஸ்யங்களை வரவழைத்திருந்தாலும், பல இடங்களில் ஏமாற்றங்களையே தந்திருக்கிறார். ஆனாலும், அண்ணாமலை ஏமாற்றுவதற்கு ஒரு காரணத்தைச் சொல்லி நாயகனை நியாயப்படுத்த முனைந்திருக்கிறார்.

0 comments:

Post a Comment

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP